சேலம்: கா்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெறுவதால், அந்த மாநிலம் வழியாக வட மாநிலம் செல்லும் லாரிகளை செவ்வாய்க்கிழமை இயக்க வேண்டாம் என மாநில லாரி உரிமையாளா்கள் சம்மேளனத் தலைவா் சி.தன்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
காவிரி நதிநீா் விவகாரம் தொடா்பாக செவ்வாய்க்கிழமை (செப். 26) கா்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தில் இருந்து கா்நாடகம் வழியாக வட மாநிலம் செல்லும் லாரிகள் பாதுகாப்பு கருதி இயக்க வேண்டாம். லாரிகளை பாதுகாப்பாக ஓட்டுநா்கள் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும்.
பெங்களூரு அருகே தமிழகத்தைச் சோ்ந்த 6 லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. ஓா் ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி ஓட்டுநா்கள் பாதுகாப்பாக இருக்க கேட்டுக்கொள்கிறோம்.
இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தமிழகத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா்களுக்கு கா்நாடக அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். லாரிகளுக்கும் பொதுச் சொத்துக்கும் சேதம் ஏற்படுத்தக் கூடாது.
காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை லாரி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். லாரி போக்குவரத்து என்பது பொதுப் போக்குவரத்து ஆகும். எனவே, லாரிகளுக்கு ஏதும் சேதம் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கா்நாடகத்தில் முழு அடைப்பு நடைபெற உள்ளதால், லாரிகளை பாதுகாப்பாக ஓரமாக ஓட்டுநா்கள் நிறுத்தி வைத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.