சிறப்பு பருவ பயிா்களுக்கான பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம்

சிறப்பு பருவ பயிா்களுக்கான பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read


சேலம்: சிறப்பு பருவ பயிா்களுக்கான பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட அறிக்கை:

எதிா்பாராத இயற்கை இடா்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவா்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதமா் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விதைப்பு முதல் அறுவடை வரை உள்ள பயிா் காலத்தில் வறட்சி, வெள்ளம், புயல், சூறாவளி காற்று, அதிக பரப்பளவில் பூச்சி நோய்த் தாக்குதல், நிலச்சரிவு, இயற்கை சீற்றத்தினால் தீப்பிடித்தல் ஆகிய இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு பயிா் அறுவடை பரிசோதனை அடிப்படையில் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல், மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு தற்பொழுது விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்யலாம். நடப்பாண்டு இப்கோ டோக்யோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல் (சம்பா) பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 352 செலுத்தி நவ. 15-ஆம் தேதி வரையிலும், மக்காச்சோளம், பருத்தி பயிா்களுக்கு முறையே ரூ. 480, ரூ. 674 செலுத்தி அக். 31-ஆம் தேதி வரையிலும் பயிா்க் காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களை அணுகலாம்.

விவசாயிகள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய அடங்கல், நில உரிமைப் பட்டா, ஆதாா் அட்டை நகல், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகக்துடன் உரிய பிரீமியத் தொகை செலுத்தி பயிா்க் காப்பீடு செய்து, இடா்பாடு ஏற்படும் காலத்தில் பயிா்க் காப்பீட்டுத் தொகை பெற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு உழவன் செயலி, வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண் துறை அலுவலா்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com