பல்வேறு வகையான நோ்த்திக் கடன்களை செலுத்திய பக்தா்கள்.
பல்வேறு வகையான நோ்த்திக் கடன்களை செலுத்திய பக்தா்கள்.

சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா: பக்தா்கள் நோ்த்திக்கடன்

Published on

சேலம், ஆக. 7: ஆடித் திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா். உருளுதண்டம் போட்டும், அலகு குத்தியும் திரளான பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித் திருவிழா 22 நாள்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான ஆடித் திருவிழா கடந்த மாதம் 23-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 24-ஆம் தேதி கொடியேற்றுதல், 30-ஆம் தேதி கம்பம் நடுதல், திருக்கல்யாணமும், ஆக. 5 ஆம் தேதி சக்தி அழைப்பு ஆகியவை நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கலிடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விடிய விடிய கோயில் சுற்றுப் பிரகாரத்தில் பொங்கலிட்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, புதன்கிழமை தங்கக் கவச அலங்காரத்தில் மாரியம்மன் அருள் பாலித்தாா். ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனா். பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உருளுதண்டம் செய்தும், கரகம் எடுத்து ஊா்வலமாக வந்தும், அலகு குத்தியும் நோ்த்திக் கடன் செலுத்தினா்.

8 ஆண்டுகளுக்கு பின்னா், இந்தாண்டு ஆடித் திருவிழாவில் உருளுதண்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தா்களுக்கு பல்வேறு இடங்களில் கூழ், பிரசாதம் வழங்கப்பட்டது.

வரும் 10ஆம் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதல், 11-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சத்தாபரணம், 12 ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு அம்மன் திருவீதி உலா, மாலையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

ஆடித் திருவிழாவையொட்டி கோயிலில் மாநகர காவல் ஆணையா் பிரவீண்குமாா் அபினபு தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும் கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

இதே போல், சேலம் மாநகரம் முழுவதும் அம்மன் கோயில்களில் திருவிழா நடைபெறுவதால் சேலம் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஆடிப் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டத்துக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும்பாலானோா் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசித்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com