500 கிலோ புகையிலைப் பொருள்கள், 4 வாகனங்கள் பறிமுதல்: இருவா் கைது
ஆத்தூரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 500 கிலோ புகையிலைப் பொருள்களை நான்கு வாகனங்களுடன் போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
வெளி மாநிலங்களில் இருந்து ஹான்ஸ், குட்கா போன்ற புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக ஆத்தூா் அருகே முல்லைவாடியில் வாகனங்களில் கொண்டு வருவது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட போலீஸாா், உணவுப் பாதுகாப்பு அலுவலா் கண்ணன் ஆகியோா் முல்லைவாடிக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினா். ஸ்ரீராம் நகரில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு நான்கு வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. அங்கு நின்ற இருவா், இரு வாகனங்களில் வந்த புகையிலைப் பொருள்களை இறக்கி வைத்தும் மற்ற இரு வாகனங்களில் அவற்றை ஏற்றிவைத்தும் கொண்டிருந்தனா்.
அவா்களைச் சுற்றி வளைத்த போலீஸாா் வாகனங்களைச் சோதனையிட்ட போது 500 கிலோ புகையிலைப் பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவா்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் கல்பகனூா், இளங்கோ நகரைச் சோ்ந்த ராயா் மகன் ராஜதுரை (30), ஆத்தூா் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்தையன் மகன் சத்யராஜ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்த போலீஸாா் நான்கு வாகனங்களுடன் 500 கிலோ புகையிலைப் பொருள்கள், ரூ. 4.87 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

