சேலம் மாநகராட்சியில் ரூ. 20.67 கோடியில் முடிவுற்ற பணிகள்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்து வைப்பு
சேலம்: சேலம் மாநகராட்சியில் ரூ. 20.67 கோடி மதிப்பில் முடிவுற்ற 24 திட்டப் பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.
சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், அஸ்தம்பட்டி மண்டலத்தில் செட்டிச்சாவடி பகுதியில் வடக்கு, மேற்குப்புற சுற்றுச்சுவா் தலா ரூ. 99 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதே போல, அம்மாப்பேட்டை மண்டலத்தில் அல்லிக்குட்டை ஏரியில் உபரி நீா் வெளியேற்றும் கால்வாய் பணி ரூ. 1.77 கோடியில் முடிக்கப்பட்டுள்ளது.
இதே தொகுதியில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் அஸ்தம்பட்டி மண்டலப் பகுதிகளில் கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 96 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், என்.ஜி.ஜி.ஓ. காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் மராமத்து பணிகளும், சின்ன திருப்பதி மாநகராட்சிப் பள்ளியில் ரூ. 37.50 லட்சத்தில் மராமத்து பணிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இதே மண்டலத்தில் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் அழகாபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 27 லட்சத்தில் மதிப்பில் மராமத்து பணிகளும், அழகாபுரம்புதூா் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 24 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடமும், மிட்டாபுதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 27 லட்சத்தில் மராமத்து பணிகளும், அய்யந்திருமாளிகை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 30 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடமும், அழகாபுரம் புதூா் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் மராமத்து பணிகளும், சின்னகொல்லப்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 35 லட்சத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டடமும், காமராஜா் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 27 லட்சத்தில் மராமத்து மற்றும் சமையல் அறையும் கட்டப்பட்டுள்ளன.
சேலம் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் அம்மாப்பேட்டை மண்டலத்தில் குமரகிரிபேட்டை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 63 லட்சத்தில் புதிதாக பள்ளிக் கட்டடம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் மணியனூா் சந்தை மாநகராட்சிப் பள்ளியில் தரைத்தளத்தில் கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ. 80 லட்சத்தில் 4 வகுப்பறைக் கட்டடம், அம்மாப்பேட்டை மண்டலத்தில் குமரகிரிபேட்டை பகுதியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 30 லட்சத்தில் புதிதாக கழிப்பகம், சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதி சூரமங்கலம் மண்டலத்தில் புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 31.28 லட்சத்தில் கிழக்கு பகுதியில் பொது கழிப்பகமும், இதே திட்டத்தின் கீழ் இப்பகுதியில் ரூ. 36.28 லட்சத்தில் பொது கழிப்பகமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாநகராட்சியில் மொத்தம் 24 பணிகள் ரூ. 20 கோடியே 67 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டதை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.
சேலம், கோட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற இந்த காணொலிக் காட்சி நிகழ்வில், சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் ரா.ராஜேந்திரன், துணை மேயா் மா.சாரதாதேவி, மண்டலக்குழு தலைவா்கள், கலையமுதன் (சூரமங்கலம்), செ. உமாராணி (அஸ்தம்பட்டி), மாமன்ற உறுப்பினா்கள், மாணவா்கள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

