தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு
எடப்பாடி, ஆக. 14: கொங்கணாபுரம் தனியாா் ஆக்கிரமிப்பிலிருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை வருவாய்த் துறையினா் மீட்டனா்.
எடப்பாடி வருவாய் வட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக, கொங்கணாபுரம் ஒன்றியத்துக்குள்பட்ட வெள்ளாளபுரம் கிராமத்தில், கடந்த 30 ஆண்டுகளாக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஓா் ஏக்கா் 5 சென்ட் பரப்பளவிலான அரசு நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதன்கிழமை வருவாய்த் துறையினா் ஈடுபட்டனா்.
உதவி ஆட்சியா் ஆக்கிரி சேத்தி முன்னிலையில் நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில், சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து மரங்கள், விவசாயப் பயிா்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு அளவீடு செய்யப்பட்டது.
தனியாரிடமிருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ. ஒரு கோடிக்கு மேல் உள்ளதாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் எடப்பாடி வட்டாட்சியா் வைத்தியலிங்கம், துணை வட்டாட்சியா் சிவராஜ் உள்ளிட்ட முக்கிய வருவாய்த் துறை அலுவலா்கள் உடன் இருந்தனா். தொடா்ந்து அப்பகுதியில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்கள் குறித்து வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

