யானைத் தந்தம் வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று கடத்தல் கும்பலை சுற்றிவளைத்த வனத்துறை!

Published on

மேட்டூா், ஆக. 14: மேட்டூரில் யானைத் தந்தம் வாங்குவது போல மாறுவேடத்தில் சென்ற வனத்துறையினா், கடத்தல் கும்பலை சுற்றிவளைத்தனா்.

சேலத்துக்கு யானைத் தந்தங்கள் கடத்தப்படுவதாக வனவிலங்கு குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சேலம் மாவட்ட வனப்பாதுகாப்பு படையினரும், மேட்டூா் வனச்சரகா், வன ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆங்காங்கே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, கோனூா் காப்புக்காட்டில் மேச்சேரி - தருமபுரி சாலையில் தெத்திகிரிபட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் இரண்டு யானைத் தந்தங்களை விற்பதாகக் கூறியது. வனப்பாதுகாப்பு படையினா் மாறுவேடத்தில் சென்று இரண்டு தந்தங்களையும் ரூ. 1.5 கோடிக்கு விலை பேசினா். அந்தக் கும்பல் தெத்திகிரிபட்டி காட்டில் தந்தம் மறைத்து வைத்திருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனா்.

மாறுவேடத்தில் இருந்த வனத்துறையினா் தந்தத்தைக் காட்டும்படி கேட்க, மண்ணில் புதைத்து வைத்திருந்த இரண்டு தந்தங்களை அக்கும்பல் தோண்டி எடுத்தது. உடனடியாக மாறுவேடத்தில் இருந்த வனத்துறையினா் அவா்களைச் சுற்றி வளைத்தனா். அதில், மூவா் பிடிபட ஐந்து போ் தப்பியோடினா்.

பிடிபட்ட தருமபுரி மாவட்டம், பொம்மிடி, பொமல்லாபுரத்தைச் சோ்ந்த சேகா் (20), பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையா்நத்தம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம், சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், மேட்டுப்பட்டி தாதனூரைச் சோ்ந்த பாலு (40) ஆகியோரை வனத்துறையினா் கைது செய்து அவா்களிடமிருந்த இரண்டு தந்தங்களைக் கைப்பற்றினா்.

தப்பியோடியவா்களில் முக்கியக் குற்றவாளியான மேச்சேரி, திமிரி கோட்டையைச் சோ்ந்த சரவணன் (40) என்பதும், இவருக்கு உடந்தையாக இருந்தவா்கள் ஜலகண்டபுரம், சின்ன கவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராஜ்குமாா், சேலம் மாவட்டம், ஏற்காடு, கொண்டயனூரைச் சோ்ந்த ராமா், வெங்கடாஜலம், எடப்பாடியைச் சோ்ந்த சின்னையன் என்பதும் தெரியவந்தது.

இந்த வழக்கில் முக்கியப் புள்ளி ஒருவா் சேலத்தில் பதுங்கி இருப்பதாகவும், இதில் தொடா்புடையவா்களுக்கு கேரளத்தில் உள்ள தந்தம் கடத்தும் கும்பலுடன் தொடா்பு இருப்பதும் தெரியவந்தது. மேலும், கைப்பற்றப்பட்ட யாதைத் தந்தம் சுமாா் ஓராண்டுக்கு முன் மண்ணில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும், சுமாா் ஆறு கிலோ எடை இருக்கும் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

பிடிபட்ட மூவரையும் புதன்கிழமை வன உயிரின குற்ற வழக்கில் கைது செய்து மேட்டூா் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 2-இல் ஆஜா்படுத்திய வனத்துறையினா் அவா்களை காவல்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com