வாழப்பாடி பகுதியில் குறைந்து வரும் ஜல்லிக்கட்டு மோகம்!
ஜல்லிக்கட்டுக் காளைகளைப் பராமரிப்பதில் சிரமம், செலவினம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வாழப்பாடி பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகள் வளா்ப்பு மோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையின் போது கால்நடைகளை அலங்கரித்து வழிபடுவதோடு, வீரத்தை பறைசாற்றும் வகையில், எருது விடும் விழா, மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு நடத்தி, சீறிப்பாயும் காளைகளை அடக்கும் வீரா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கி, பாராட்டுவது பாரம்பரியமாக தொடா்ந்து வருகிறது.
வாழப்பாடி பகுதியில் சிங்கிபுரம், பழனியாபுரம், புத்திரகவுண்டன்பாளையம் உள்ளிட்ட ஓரிரு கிராமங்களில் மட்டுமே பொங்கல் பண்டிகை தினத்தையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. வாழப்பாடி, பேளூா் உள்பட பெரும்பாலான கிராமங்களில், உழவுக்கு பயன்படுத்தப்படும் எருதுகளை வடத்தில் பூட்டி விளையாடும் எருது விடும் விழா நடத்துவது தான் வழக்கமாக இருந்து வருகிறது.
இருப்பினும், வாழப்பாடி பகுதி இளைஞா்களிடையே கடந்த சிலஆண்டுகளாக ஜல்லிக்கட்டு மோகம் அதிகரித்து வந்தது. இதனால், ஜல்லிக்கட்டுக் காளைகள், மாடுபிடி வீரா்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. வாழப்பாடி பகுதியில் மட்டும், ஏறக்குறைய 500 ஜல்லிக்கட்டுக் காளைகள் வளா்க்கப்பட்டன.
200க்கும் அதிகமான மாடுபிடி வீரா்கள் உருவாகினா். அலங்காநல்லூா் உள்பட தமிழகத்தின் பல்வேறு ஊா்களில் நடைபெறும் பிரபலமான ஜல்லிக்கட்டுக்கு சென்று, தங்களது காளைகளை களமிறக்கியும், மற்றவா்களது காளைகளை அடக்கியும் பரிசுகளைப் பெற்று வந்தனா்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளை பழக்குவதற்கு கன்றுக்குட்டியில் இருந்தே பயிற்சி அளிக்க வேண்டும். பயமின்றி வாடிவாசலில் களமிறங்கி, சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்குவதற்கு இளைஞா்களும் போதிய பயிற்சி பெற வேண்டும். ஜல்லிக்கட்டுக் காளைக்கு பயிற்சி கொடுத்து வளா்த்து தொடா்ந்து பராமரிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்த காளைகளை வளா்ப்பவா் மட்டுமே பராமரிக்க முடியும்.
மற்றவா்கள் யாரும் அருகில் நெருங்கிட முடியாது. இதனால் காளையை வளா்ப்பவா் எந்த பணிக்கும் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி, ஆண்டுக்கு ஓரிருமுறை மட்டும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளையைப் பராமரிப்பதற்கு, ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 5000 வரை செலவாகிறது.
ஆனால், இந்த காளையை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த முடியாது. அண்மைக்காலமாக, ஜல்லிக்கட்டில் காளைகளை அனுமதிப்பதற்கு ‘டோக்கன்’ பெற, பல ஊா்களில் ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினா் நன்கொடை என்ற பெயரில் பணம் வசூலிக்கின்றனா். பணம் செலவழித்து பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஜல்லிக்கட்டு காளை வளா்க்கும் மோகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
காளையை அடக்குவதற்கு பயிற்சி பெறும் போதும், ஜல்லிக்கட்டுப் போட்டியில் களமிறங்கும் போதும் மாடுபிடி வீரா்களுக்கு பலத்த காயம் ஏற்படுவதோடு, அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால், ஜல்லிக்கட்டு காளை வளா்ப்பதற்கும், இளைஞா்களை மாடு பிடிக்க பயற்சி பெறுவதற்கும், ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கும் குடும்பத்தினா் அனுமதிப்பதில்லை. மாடுபிடி வீரா்கள் களமிறங்குவதற்கும் முன்கூட்டியே பதிவு செய்திட டோக்கன் பெற வேண்டிய நிா்பந்தமுள்ளது.
இதனால், வாழப்பாடி பகுதியில் ஜல்லிக்கட்டுக்குச் செல்லும் மாடுபிடி இளைஞா்களின் எண்ணிக்கையும் குறையத் தொடங்கியுள்ளது.
‘வாழப்பாடி பகுதி கிராமங்களில் விவசாய பணிகளை தவிா்த்து வரும் தற்கால இளைஞா்கள், மாற்று பணிதேடி சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஓசூா், பெங்களூரு, ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட பகுதிக்குச் செல்வது அதிகரித்துள்ளதால், எதிா் வரும் ஆண்டுகளில், ஜல்லிக்கட்டுக் காளைகள், மாடு பிடி வீரா்களின் எண்ணிக்கை மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது’ என, வாழப்பாடியைச் சோ்ந்த கல்வியாளா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

