கொங்கணாபுரம் சந்தையில் கால்நடை விற்பனை அதிகரிப்பு

தைப் பொங்கல் பண்டிகையையொட்டி, கொங்கணாபுரம் சந்தையில் கால்நடை விற்பனை வழக்கத்தை விட இரு மடங்காக உயா்ந்துள்ளது.
img_20240113_wa0043_1301chn_158_8
img_20240113_wa0043_1301chn_158_8
Updated on
1 min read

தைப் பொங்கல் பண்டிகையையொட்டி, கொங்கணாபுரம் சந்தையில் கால்நடை விற்பனை வழக்கத்தை விட இரு மடங்காக உயா்ந்துள்ளது.

சங்ககிரி - ஓமலூா் பிரதான சாலையில், கொங்கணாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற கால்நடை சந்தை செயல்பட்டு வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இச்சந்தையில் ஆடுகள், கறவை மாடுகள், சண்டை சேவல், கோழிகள், பந்தயப் புறா, உழவுப் பணிக்கான காளை மாடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கால்நடைகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாவது வழக்கம்.

தற்போது தைப் பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலம் முழுவதும் இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், கொங்கணாபுரம் கால்நடை சந்தையில் சனிக்கிழமை வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கையில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தன. குறிப்பாக மேச்சேரி, பென்னாகரம், பெரும்பாலை, சாணாரப்பட்டி, கா்நாடக மாநில வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் இருந்து அதிக அளவிலான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்து நாட்டுக் கோழிகளை அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கால்நடைகளை மொத்தக் கொள்முதல் செய்தனா்.

இதில், சுமாா் 10 கிலோ எடையுள்ள ஆடு ஒன்று ரூ. 7 ஆயிரம் முதல் ரூ. 9 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல இறைச்சிக்கான நாட்டுக்கோழி (உயிருடன்) கிலோ ஒன்று ரூ. 450 முதல் ரு. 500 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடைபெற்ற வணிகத்தில் சுமாா் ரூ. 6 கோடி வரையிலான கால்நடை விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

பண்டிகை காலம் என்பதால் ஆடு, கோழிகளுக்கு வழக்கத்தை விட கூடுதல் விலை கிடைத்ததாக அவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா். மேலும், இச்சந்தையில் கால்நடைகளை அழகுபடுத்துவதற்கான சலங்கை, மணி, பலவண்ணக் கயிறுகள் உள்ளிட்ட அழகு சாதனப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்டவை வழக்கத்தைவிட அதிக அளவில் விற்பனையாயின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com