

வாழப்பாடி: வாழப்பாடி பகுதியில் வங்காநரியை பிடித்து வழிபாடு நடத்துவதை தடுக்க வனத்துறையினர் குவிக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் சின்னம்ம நாயக்கன்பாளையம், கொட்டவாடி , ரங்கனூர், பெரிய கிருஷ்ணாபுரம், சின்ன கிருஷ்ணாபுரம், மத்தூர், தமையனூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையொட்டி காணும் பொங்கல் தினத்தன்று, வங்காநரி பிடித்து ஊர்வலமாக கொண்டு சென்று, நரியாட்டம், ஜல்லிக்கட்டு நடத்தி வழிபடும் முறை 200 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய வழக்கமாக தொடர்ந்து வருகிறது.
வங்காநரி அரிய வனவிலங்கு பட்டியலில் இருப்பதால், இந்த நரியை பிடித்து நரியாட்டம் நடத்துவதற்கும், வழிபடுவதற்கும் வனத்துறை தடை விதித்துள்ளது.
இது குறித்து கிராமங்கள்தோறும் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இருப்பினும் தடையை மீறி வங்காநரி பிடித்து கிராம மக்கள் பாரம்பரிய விழாவை கொண்டாடக் கூடும் என்பதால், டி.எஃப்.ஓ ஷஷாங் ரவி தலைமையில், வனச்சரகர்கள் வாழப்பாடி மாதேஸ்வரன், சேலம் சேர்வராயன் தெற்கு துரைமுருகன், தும்பல் விமல்ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், கொட்டவாடி, சின்னமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் குவிக்கப்பட்டு, இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிராமப்புற தரிசு நிலங்களில் வாழும் வங்காநரியை வனவிலங்கு பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். வங்காநரியை பிடித்து வழிபட, மத்திய, மாநில அரசுகள் சட்ட திருத்தம் செய்து வழிவகை செய்ய வேண்டுமென, வாழப்பாடி பகுதி கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.