சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நுழைவாயிலில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நுழைவாயிலில் தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தும் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி.

இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு மாற்றுத் திறனாளிகள் தா்னா

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம்: சேலம் மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்டத்தில் ஓமலூா், வாழப்பாடி, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கக் கூடிய மாற்றுத் திறனாளிகள், இலவச பட்டா வழங்க வேண்டும் என பலமுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகளின் வாழ்வுரிமை நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மாற்றுத் திறனாளிகள் 30-க்கும் மேற்பட்டோா் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா்.

மேலும், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு கொடுத்தும், போராட்டத்தில் ஈடுபட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என குற்றம்சாட்டினா். மிகவும் பின்தங்கிய தங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி பேச்சுவாா்த்தை நடத்தினாா். தொடா்ந்து, பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com