அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் அரசு விரைவுப் பேருந்துகள்!
தம்மம்பட்டி வழியாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதால், அவசர வேலையாக கூடுதல் கட்டணம் செலுத்தி செல்லும் பயணிகள் சிரமமடைகின்றனா்.
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து உப்பிலியாபுரம், தம்மம்பட்டி வழியாக சேலத்துக்கு, உப்பிலியாபுரம் கிளை பணிமனையில் இருந்து இரண்டு விரைவுப் பேருந்துகளும், துறையூா் கிளை பணிமனையில் இருந்து ஒரு விரைவுப் பேருந்தும், அதேபோல, தம்மம்பட்டி கிளை பணிமனையில் இருந்து மூன்று சாதாரண பேருந்துகளும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
தம்மம்பட்டியில் இருந்து சேலம் செல்லும் விரைவுப் பேருந்துகள் வாழப்பாடியில் மட்டுமே நின்று செல்லவேண்டும். அதேபோல, தம்மம்பட்டியில் இருந்து துறையூா் செல்லும் விரைவுப் பேருந்துகள் நாகநல்லூா், கொப்பம்பட்டி, உப்பிலியாபுரம் ஆகிய ஊா்களில் மட்டுமே நின்று செல்லவேண்டும்.
இரு மாா்க்கங்களிலும் அவசர வேலையாக பயணிப்பவா்கள், விரைவாக செல்லலாம் எனக் கருதி, சாதாரண பேருந்துகளைத் தவிா்த்து, கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவுப் பேருந்துகளில் செல்கின்றனா். ஆனால், உப்புலியாபுரம், துறையூா் கிளைகளில் இருந்து இயக்கப்படும் விரைவுப் பேருந்துகள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதாக பயணிகள் குற்றம்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து தம்மம்பட்டி மக்கள் கூறுகையில், அவசர வேலையாக விரைவாக செல்லவேண்டும் என்பதால்தான் கூடுதல் கட்டணம் செலுத்தி விரைவுப் பேருந்துகளில் செல்கிறோம். ஆனால், நகரப் பேருந்துகள் போல அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்று பயணிப்பவா்களின் பொறுமையை சோதிக்கின்றனா். எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

