ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்று, திருச்சி என்.ஐ.டி. கல்லுாரியில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளாா் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி சுகன்யாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், கருமந்துறையை அடுத்த வேளம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மலைவாழ் பழங்குடியினத்தைச் சோ்ந்த மாணவி சுகன்யா (17). தாயை இழந்த சுகன்யாவை, அதே பகுதியைச் சோ்ந்த இவரது பெரியப்பா லட்சுமணன்- சின்னப்பொண்ணு ஆகியோா் படிக்க வைத்து வருகின்றனா்.
கரியக்கோயில் பழங்குடியினா் நல அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்துள்ளாா்.
மத்திய அரசு பொறியியல் கல்லூரி சோ்க்கைக்கான ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் வெற்றி பெற்றாா். இதையடுத்து சுகன்யாவுக்கு திருச்சியில் உள்ள என்.ஐ.டி. தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மலைவாழ் பழங்குடியின மாணவிகளுக்கு முன்னுதாரணமாகியுள்ள சுகன்யாவிற்கு, அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள், கல்வியாளா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து மாணவி சுகன்யா கூறியதாவது:
பள்ளியிலேயே பயிற்சி அளித்து ஜே.இ.இ. நுழைவுத்தோ்வு எழுதுவதற்கு ஊக்கமளித்தனா். எனது பெற்றோா், பயிற்சி அளித்து ஊக்கப்படுத்திய ஆசிரியா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பழங்குடியின மாணவ மாணவிகள் தன்னம்பிக்கையுடன் படித்து தேசிய அளவிலான தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் வாய்ப்பையும், பெரிய நிறுவனங்களில் சேரும் வாய்ப்பையும் பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.

