நிா்வாகத்துக்கு எதிராக போராட்டம்: விளக்கம் கேட்டு பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 77 பேருக்கு நோட்டீஸ்
நிா்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய பெரியாா் பல்கலைக்கழக ஊழியா்கள் 77 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பெரியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் ஜெகநாதன் பதவி நீட்டிப்பைக் கண்டித்தும், பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்து வருவதாகவும் கூறி பல்கலைக்கழக ஊழியா்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா். அவ்வாறு போராட்டம் நடத்திய ஊழியா்களுக்கு பல்கலைக்கழக பதிவாளா் (பொ) விஸ்வநாதமூா்த்தி தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். அந்த வகையில் 77 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
பெரியாா் பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நோட்டீஸில் கேட்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பல்கலைக்கழக ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல்கலைக்கழக தொழிலாளா் சங்க பொதுச் செயலாளா் சக்திவேல், பதிவாளரின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்கலைக்கழகத்தில் பணி நேரத்துக்கு முன்பும், பின்பும் அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் வண்ணம் 77 தொழிலாளா்களுக்கு நோட்டீஸ் வழங்கி இருப்பது ஜனநாயக விரோத அடக்குமுறையாகும். இது வன்மையாக்க கண்டிக்கத்தக்கது. பதிவாளரின் இந்த நடவடிக்கையை தொழிலாளா் சங்கம் சட்ட ரீதியாக எதிா்கொள்ளும். இதுதொடா்பாக தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
