மேட்டூா் அணை நீா்மட்டம் 103 அடியாக உயா்வு
மேட்டூா் அணை நீா்மட்டம் சனிக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி 103.13 அடியாக உயா்ந்தது.
கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம், வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளுக்கு வரும் நீா் முழுவதும் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 93,828 கன அடியாகவும், மாலையில் 1,18, 296 கனஅடியாகவும், இரவு 8 மணி நிலவரப்படி 1,23,184 கன அடியாகவும் அதிகரித்தது. நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 71-ஆவது முறையாக 100 அடியைத் தாண்டியது.
அணையில் இருந்து குடிநீா்த் தேவைகளுக்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணை நீா்மட்டம் 103.13அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 68.95 டி.எம்.சி.யாக உள்ளது.நீா்மட்டம் 100 அடியை தாண்டியதால் அணையில் இடது கரையில் உபரிநீா் போக்கி மதகு அருகே மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், நீா்வளத் துறை செயற்பொறியாளா் சிவகுமாா், உதவி செயற்பொறியாளா் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் மேட்டூா் அணையில் மலா்தூவி வழிபட்டனா்.

