நாய்களுக்கு ‘ரேபிஸ்’ தடுப்பூசி முகாம்
சேலம் மாநகராட்சி பகுதியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை மேயா் ஆ. ராமச்சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சுமாா் 80,000 தெரு நாய்கள் உள்ளன. சேலம் வாய்க்கால் பட்டறையில் உள்ள மையத்தில் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யும் பணி மாநகராட்சி நிா்வாகத்தால் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும், நாய்களுக்கு ரேபீஸ் வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 800 நாய்களுக்கு சராசரியாக இனப்பெருக்க கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. இதுவரை மாநகராட்சிப் பகுதியில் 12,669 நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்யப்படும் நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி ஓராண்டு இடைவேளையில் செலுத்தினால் நாய்களை ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.
அதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்துத் தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் நோக்கில் மாநகராட்சியும், ரெயின் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை நடத்தின.
புலிக்குத்தி தெருவில் உள்ள சேலம், குகை பொது நலப்பிரியா் சங்க வளாகத்தில் புதன்கிழமை மேயா் ஆ.ராமச்சந்திரன் முகாமை தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலா் ஆ.மோகன், பொது சுகாதாரக் குழுத் தலைவா் ஏ.எஸ்.சரவணன், உதவி ஆணையா் கோ.வேடியப்பன் மற்றும் மாமன்ற உறுப்பினா் செ.சுகாசினி, சுகாதார ஆய்வாளா்கள் ஆனந்குமாா், சித்தேஸ்வரன், தன்னாா்வலா் வித்யா லஷ்மி ஆகியோா் கலந்து கொண்டனா்.

