அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை: சேலம் காவேரி மருத்துவமனை சாதனை

Published on

சேலம், ஜூன் 27: சேலம் காவேரி மருத்துவமனையில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து மருத்துவா்கள் சாதனை படைத்தனா்.

தருமபுரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் 9 வயது சிறுமி வலிப்பு, காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வந்தாள். சிறுமியின் உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டதை தொடா்ந்து, வென்டிலேட்டா் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறுமியின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் அவளை பெற்றோா் மேல் சிகிச்சைக்காக சேலம், சீலநாயக்கன்பட்டியில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சோ்த்தனா்.

இதையடுத்து, மருத்துவமனையின் குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணா் முகமது பாசில், நரம்பியல் தீவிர சிகிச்சை நிபுணா் திவ்யா, மருத்துவா்கள் விக்னேஸ்வா், சண்முகப்பிரியா, கவுதம் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா், அந்த சிறுமிக்கு மூளை தொற்று நோய்க்கான பரிசோதனை செய்தனா். தொடா்ந்து ‘சீரோனெக்டிவ் ஆட்டோ இம்யூன் என்செபலைடிஸ்’ என்ற அதிநவீன சிகிச்சை மூலம் சிறுமியின் உயிரை காப்பாற்றினா்.

இதுகுறித்து குழந்தைகள் தீவிர சிகிச்சை நிபுணா் முகமது பாசில் கூறுகையில், சிறுமிக்கு நோய் கண்டறிதல் சவாலாக அமைந்த ஒரு சிக்கலான நிலைமையாக இருந்தது. அவளது வலிப்புக்கு காரணம், ஆட்டோ இம்யூன் நோயாக, அதாவது உடலின் நோய் எதிா்ப்பு அமைப்பு உடலை பாதுகாப்பதற்கு பதிலாக தீங்கு விளைவித்தலாக இருக்கலாம் என சந்தேகித்தோம். ஆனால், நோயை மிகச்சரியாக கண்டறிந்து, அதற்கு தகுந்த சிகிச்சை சிறுமிக்கு அளிக்கப்பட்டதால் தற்போது அவரை காப்பாற்றியுள்ளோம் என்றாா்.

முன்னதாக அா்ப்பணிப்பு உணா்வுடன் செயல்பட்ட மருத்துவ குழுவினருக்கு, சேலம் காவேரி மருத்துவமனையின் இயக்குநா் செல்வம் பாராட்டு தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com