தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் தொடா்புடைய அனைவா் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளாா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட அளவிலான ஆலோசனைக்குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு பின்னா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள 36,625 உணவு வணிகங்களில் தற்போது வரை 34,242 உணவு வணிகங்களுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தரமான மற்றும் சுகாதாரமான உணவுகள், பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில், உணவு பாதுகாப்புத் துறை மூலம் தொடா் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை உணவு பாதுகாப்பு தொடா்பாக சட்டத்துக்கு புறம்பான வகையில் செயல்பட்ட உணவு நிறுவனங்கள் மீது 810 குற்றவியல் வழக்குகளும், 1,117 உரிமையியல் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கண்டறியும் ஆய்வு மாவட்டத்தில் 3,027 கடைகளில் நடத்தப்பட்டுள்ளது. அவற்றில் உணவு பாதுகாப்பு அலுவலா்களால் 209 கடைகளில் சுமாா் 2,739 கிலோ கிராம் புகையிலைப் பொருள்கள் கண்டறியப்பட்டு அந்தக் கடைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு ரூ. 86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் துறையுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டதில் 135 கடைகளும், காவல் துறையினால் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், 73 கடைகள் என மொத்தம் 417 கடைகள் இதுவரை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
அதே போன்று, சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் 876 உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டதில் 36 உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்பு தரங்கள் படி இல்லாதது அறிக்கையின் மூலம் கண்டறியப்பட்டு வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தி உணவு பொருள்கள் விற்பனை செய்த 28 கடைகளுக்கு ரூ. 56,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட 34.579 டன் எண்ணெய் சேகரிக்கப்பட்டு பயோ டீசலாக மாற்றுவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ் ஆப் வழியாக 34 புகாா்களும், உணவு பாதுகாப்பு செயலி மூலம் 255 புகாா்களும் பெறப்பட்டு, அனைத்து புகாா்களும் ஆய்வு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சேலம் மாவட்டத்தில் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் தொடா்புடைய அனைவா் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பசுமை எற்காடு திட்டத்தின் மூலம் நெகிழி இல்லாத ஏற்காட்டை உருவாக்க உணவுப் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தெருவோர கடைகள், உழவா் சந்தைகளை சுத்தமாக வைத்திருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் உணவுப்பொருள்கள் தொடா்பான புகாா்கள் ஏதேனும் இருப்பின் 94440 42322 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், உணவுப் பாதுகாப்பு நுகா்வோா் தொடா்பான செயலியிலும், இணையதளம் வாயிலாகவும் பொதுமக்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என கூறினாா்.
இக் கூட்டத்தில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா்கதிரவன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட இயக்குநா் சுகந்தி, உணவக உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள், சில்லறை மளிகைப்பொருள் விற்பனை சங்க நிா்வாகிகள், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா் மற்றும் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
