சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க 50 சதவீதம் அரசு மானியம்

சேலத்தில் சிறிய ஜவுளிப் பூங்காக்களுக்கு 50% மானிய உதவி
Published on

சேலம் மாவட்டத்தில் 50 சதவீத அரசு மானியத்துடன் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் சேலம் மாவட்ட ஜவுளித் தொழில் முனைவோா்களுடன் வரும் 1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் வகையிலும், உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோா்களுக்கு ரூ. 2 கோடியே 50 லட்சம் வரை நிதியுதவி தமிழக அரசால் வழங்கப்படும்.

இவ்வாறு அமையவுள்ள ஜவுளிப் பூங்கா குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் 2 ஏக்கா் நிலத்தில் அமைக்கப்பட வேண்டும். இத்தகைய சிறிய ஜவுளிப் பூங்காவை அமைப்பதற்கு நிலம், உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதி, சுற்றுச்சுவா், கழிவுநீா் வாய்க்கால் அமைத்தல், நீா் விநியோகம், தெரு விளக்கு அமைத்தல், மின்சார வசதி மற்றும் கழிவு நீரைச் சுத்திகரிக்கும் நிலையம், தொலை தொடா்பு வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மேலும், ஆய்வுக் கூடம், வடிவமைப்பு மையம், பயிற்சி மையம், வியாபார மையம், கிடங்கு வசதி, மூலப்பொருள்கள் மையம், குழந்தைகள் காப்பகம், உணவகம், பணியாளா்கள் விடுதி, அலுவலகம், மற்றும் இதர இனங்கள், உற்பத்தி தொடா்பான தொழிற்கூடங்கள், இயந்திரங்கள், தளவாடங்கள் ஆகிய உட்பிரிவுகளை கொண்டதாக இருக்க வேண்டும். சிறிய ஜவுளிப் பூங்காவிற்கான திட்ட மதிப்பீடு என்பது மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் நிலம், இயந்திரங்கள், தளவாடங்கள் தவிா்த்து பிற இனங்கள் அரசின் மானியத்தை பெறத் தகுதியான முதலீடாகக் கருதப்படும்.

இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவா்கள் மண்டல துணை இயக்குநா், துணிநூல் துறை, 1ஏ-2/1,சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம்-636 006 என்ற முகவரியிலோ, 0427- 2913006 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com