பௌா்ணமி, பங்குனி உத்திரத்தையொட்டி 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

பௌா்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் சனிக்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதி வரை பல்வேறு வழித் தடங்களில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பௌா்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் சனிக்கிழமை முதல் வரும் 25-ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழிதடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதே போல, பௌணா்மியை முன்னிட்டு, சேலத்தில் இருந்து வரும் 24-ஆம் தேதி காலை 6 மணி முதல் 25-ஆம் தேதி காலை 6 மணி வரை ஒரு மணி நேரம் வீதம் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதே போன்று, பங்குனி உத்திரத்தையொட்டி, ஆத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து வடசென்னிமலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பயண நெரிசலைத் தவிா்த்து பயணிகள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள இவ்வசதியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com