கொலையில் முடிந்த குழப்பமான கள்ளக் காதல்!

கொலை செய்யப்பட்டு இரண்டு மாதத்துக்கு பிறகு சடலத்தை கைப்பற்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நடராஜன், சுபலட்சுமி
நடராஜன், சுபலட்சுமி

சேலம்: ஏற்காடு மலைப் பாதையில் சூட்கேஸில் இருந்த சடலத்தை கைப்பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கள்ளக் காதல் மனைவியை கொலை செய்து ஏற்காட்டில் வீசிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பாதையில் கடந்த 20-ஆம் தேதி கடும் துர்நாற்றத்துடன் சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலை தொடர்ந்து, ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்ததில், சூட்கேஸில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்துள்ளது.

அந்த சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவுப்படி, தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஊரக உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் குற்றப்பிரிவு குழு மற்றும் ஏற்காடு ஆய்வாளர் செந்தில் ராஜ்மோகன் தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

கொலையாளி பிடிபட்டது எப்படி?

சடலம் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் இருந்த ஸ்டிக்கரை வைத்து விசாரணையை போலீசார் தொடங்கினர். விசாரணையில் அந்த சூட்கேஸ் கோயம்புத்தூரில் உள்ள ஒரு கடையில் வாங்கப்பட்டது தெரியவந்ததும் கோவை விரைந்த தனிப்படையினர் அந்த கடையில் விசாரித்தனர்.

அந்த கடையில் கடந்த 3 மாதத்தில் 12 சூட்கேஸ் விற்பனை ஆகியுள்ளது. இந்த நிலையில் தனிப்படையினர் அந்த 12 சூட்கேஸ் வாங்கியவர்களின் விவரங்களை அந்த கடையில் சேகரித்தனர்.

அதில் 10 பேர் அதே ஊரில் இருந்துள்ளனர். ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டார். மீதமிருந்த நடராஜன் என்பவரது செல்போன் அணைத்து வைக்கபட்டிருந்தை தொடர்ந்து அவரது செல்போன் சிக்னல் விவரங்கள் சோதனை செய்துள்ளனர்.

அதில் நடராஜ் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது நண்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். உடனடியாக ஜோலார்பேட்டையில் உள்ள அவரது நண்பரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், நடராஜ் திருப்பத்தூரில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக நடராஜை கைது செய்ய தனிப்படை போலீஸார் திருப்பத்தூர் விரைந்த நிலையில், தகவலறிந்த நடராஜ் மற்றும் அவரது உறவினர் கனிவழகன் சனிக்கிழமை மாலை ஏற்காடு கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜிடம் சரணடைந்தார்.

தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் தகவல் அளித்ததன் பேரில், ஏற்காடு காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்

நடராஜனிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சூட்கேஸில் சடலமாக கிடந்தது தேனி மாவட்டம் முத்துலாபுரம் கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டி மனைவி சுபலட்சுமி என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கொல்லப்பட்ட சுபலட்சுமி மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் ஏற்கெனவே திருமணம் ஆனவர்கள்.

பிரான்சில் நடராஜனும், கத்தாரில் சுபலட்சுமியும் பணிபுரிந்துள்ளனர். இருவருக்கும் திருமணத்துக்கு வரன் தேடும் இணையதளம் மூலம் தொடர்பு ஏற்பட்டு பழகி வந்தனர்.

கடந்தாண்டு இந்தியா வந்த இருவரும், சில மாதங்களில் ஒன்றாக கத்தார் நாட்டுக்கு சென்று பணிபுரிந்துள்ளனர். அங்கு வேலை பிடிக்காததால் இந்தியா திரும்பிய இருவரும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

கோவை பீளமேட்டில் வீடு எடுத்து சுபலட்சுமியுடன் தங்கி வந்த நடராஜன், தனது மனைவியிடம் பிரான்சில் இருப்பது போன்று செல்போனில் பேசி வந்துள்ளார்.

ஏற்கெனவே சுபலட்சுமி கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதற்கிடையே, மனைவி மற்றும் குழந்தையை காண்பதற்காக நடராஜன் தனது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை கிராமத்துக்கு சென்றுவிட்டு ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் கோவை திரும்பியுள்ளார்.

மனைவியை காண சென்ற நடராஜன், தனது கையில் சுபலட்சுமி என்று பச்சைக் குத்தியதை அழித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சுபலட்சுமி, நடராஜனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றி நடராஜன் தள்ளிவிட்டதில் சுபலட்சுமி கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தனது உறவினர் கனிவழகன் என்பவரின் உதவியுடன் சுபலட்சுமியின் உடலை அப்புறப்படுத்த திட்டமிட்ட நடராஜன், கடந்த ஜனவரி 3-ஆம் தேதி சூட்கேஸ் வாங்கி அதில் சுபலட்சுமி உடலை அடைத்துள்ளார்.

மேலும், வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு ஏற்காடு மலைப்பகுதிக்கு சென்ற இருவரும் சுபலட்சுமியின் உடலை வீசிவிட்டு சொந்த ஊருக்கு திரும்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

நடராஜனின் வாக்குமூலத்தை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com