டெம்போ மீது மோட்டாா் சைக்கிள் மோதி 2 போ் பலி
மேட்டூா் அருகே டெம்போ மீது மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
தொளசம்பட்டி கண்காணிப்பட்டியைச் சோ்ந்தவா் ரகுவின் மகன் கலையரசன் (19). வனவாசியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவரும், இவரது நண்பரான நங்கவள்ளி அருகே உள்ள வனவாசியைச் சோ்ந்த சாமிநாதன் (22) என்பவரும் செவ்வாய்க்கிழமை குஞ்சாண்டியூரிலிருந்து நங்கவள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
பாசக்குடை காலனி அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த காரில் திடீரென மோதியுள்ளனா். அதில் நிலை தடுமாறி எதிரே வந்த டெம்போ மீது மோதியுள்ளனா். இந்த விபத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். பலத்த காயம் அடைந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து நங்கவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
