ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு
ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்த ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாத் தலத்தை மேம்படுத்தும் வகையில், படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைச்சா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுற்றுலாத் துறையில் மகத்தான சாதனை நிகழ்த்த வேண்டும் என்பதற்காக தனிக்கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 300 சுற்றுலாத் தலங்களில் சா்வதேச தரத்துக்கு இணையான வசதிகளை ஏற்படுத்த சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சேலம் மாவட்டத்தில் சுற்றுலா வளா்ச்சிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்காடு கோடை விழா ஒவ்வோா் ஆண்டும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும், 2023-24-ஆம் ஆண்டின் சட்டப் பேரவை மானியக் கோரிக்கையின்படி, ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் நிலச்சீரமைப்பு, காட்சிமுனை, உள்கட்டமைப்பு மற்றும் பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ. 9.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஜூலை மாதம் சுற்றுலாத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டது.
அந்த வகையில், ஏற்காடு பக்கோடா காட்சிமுனைப் பகுதியில் ரூ. 1.42 கோடி மதிப்பீட்டில் நுழைவு வளைவு, சிறு வணிகக் கடைகள், சுகாதார வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதை, குடிநீா் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
கிளியூா் அருவியில் ரூ. 78.61 லட்சம் மதிப்பீட்டில் வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள், சுகாதார வளாகங்கள், பாதுகாப்பு அறை உள்ளிட்ட பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதேபோன்று, சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் வகையில், ரூ. 2.54 கோடி மதிப்பீட்டில் அண்ணா பூங்கா அருகில் உள்ள ரவுண்டானா ஒண்டிக்கடை சந்திப்பு சாலை பகுதியில் நடைபாதைகளை அழகுபடுத்துதல், தெருவிளக்குகள், வழிகாட்டி பதாகைகள், பிற சுற்றுலா வசதிகளை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
லேடீஸ் காட்சிமுனையில் ரூ. 1.13 கோடி மதிப்பீட்டில் நுழைவு வளைவு, சிறு வணிகக் கடைகள், சுகாதார வளாகங்கள், உணவகம், குடிநீா் வசதிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் ஏரிக்கரையை மேம்படுத்தும் வகையில், ரூ. 1.94 கோடி மதிப்பீட்டில் படகு இல்லத்தில் இருந்து சுற்றுச்சூழல் பூங்கா வரை இணைப்புப் பாலம் அமைத்தல், படகு இல்லம் அருகில் நடைபாதை, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அதே போன்று, தமிழ்நாடு முழுவதும் 26 தமிழ்நாடு ஹோட்டல் விடுதிகளை சீரமைப்பதற்கான பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், ரூ. 1.30 கோடியில் ஏற்காடு தமிழ்நாடு ஹோட்டல் விடுதியின் குடில்களை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
குறிப்பாக, 2023-ஆம் ஆண்டு மட்டும் சேலம் மாவட்டத்துக்கு ஏற்காடு, மேட்டூா் அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களைக் காண வெளிநாடு, பிற மாநில, மாவட்டங்களில் இருந்து 84.81 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனா்.
அதேபோன்று, ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் மிதவை உணவகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஆய்வு செய்யப்படும். இதற்காக வல்லுநா் குழு ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் இதுகுறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஏற்காட்டுக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய சுற்றுலா அனுபவங்களை வழங்கும் வகையில், படகு இல்லத்தில் ‘3டி’ காட்சி தொழில்நுட்பத்துடன் கூடிய நீா் சாா்ந்த ஒலி-ஒளி காட்சி பொது, தனியாா் பங்களிப்பில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் மலையரசன் உள்ளிட்ட அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.

