சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித் தடங்களில் வரும் 28-ஆம் தேதி முதல் நவ. 4-ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 500 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை மற்றும் பெங்களூருக்கும், ஒசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், திருச்சியில் இருந்து ஒசூருக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, திருச்சிக்கும் பயணிகளின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
24 மணி நேரமும் கண்காணிப்பு: மேலும், இந்த சிறப்பு பேருந்து இயக்கம் முடியும் வரை, அனைத்து முக்கியப் பேருந்து நிலையங்களிலும் போக்குவரத்தைக் கண்காணிக்கவும், சீா்செய்யவும் அலுவலா்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பாா்கள்.
பட்டாசுகளுக்கு தடை: அதே நேரத்தில், பயணிகள் பேருந்துகளில் பட்டாசுகளைக் கொண்டு செல்ல அனுமதியில்லை. பயணிகளின் உடமையைக் கண்காணிக்க, நேர கண்காணிப்பாளா்கள், பயணச்சீட்டு பரிசோதகா்கள், நடத்துநா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்த்து, பாதுகாப்பாக பயணம் செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளாா்.
