பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு
சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து தீயணைப்புத் துறையினா் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா்.
தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பண்டிகையைக் கொண்டாட மக்கள் தயாராகியுள்ளனா்.
பண்டிகை நாளன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனை மக்கள் பின்பற்ற தீயணைப்புத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
விபத்துகள் ஏதும் இன்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றி சேலம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் மகாலிங்கமூா்த்தி தலைமையிலான தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுப்படுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும், தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சர வெடிகளைத் தவிா்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில், உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனா்.
குறிப்பாக, வெடி வெடிக்கும்போது, அருகில் ஒரு வாளியில் தண்ணீா், மணல் வைத்திருக்க வேண்டும். இறுக்கமான பருத்தி ஆடைகளை அணிந்துகொண்டு வெடிக்க வேண்டும். தளா்வான ஆடைகளை அணியக் கூடாது. நீண்ட வத்திக் குச்சிகளை பயன்படுத்த வேண்டும். வெடிக்காத பட்டாசு மற்றும் புஸ்வானம், மத்தாப்பூகளை மீண்டும் கொளுத்தக் கூடாது. வீடு அல்லது இதர கட்டடங்கள் அருகில் அணுகுண்டு போன்ற வெடிகளை வெடிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனா்.
