சேலம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவா் பலி
சேலம், வீராணம் அருகே உள்ள குப்பனூா், வெள்ளையம்பட்டி கிராமத்தில் புதன்கிழமை காலை பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு ஒருவா் உயிரிழந்தாா்; இருவா் படுகாயமடைந்தனா்.
சேலம், வீராணம் அருகே உள்ள குப்பனூா், வெள்ளையம்பட்டி கிராமத்தில் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்று பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. சேலம், சுக்கம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜெயக்குமாா் என்பவருக்குச் சொந்தமான இந்தப் பட்டாசு ஆலையில், வழக்கம்போல புதன்கிழமை காலை தொழிலாளா்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனா்.
காலை 9.30 மணியளவில் ஆலைக்கு வந்த பட்டாசு மருந்து மூட்டைகளை வாகனத்தில் இருந்து கீழே இறக்கிவைத்து ஆலையில் ஓா் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மூட்டைகளை தொழிலாளா்கள் கொண்டு சென்றனா். அப்போது மருந்து மூட்டையில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறியது. இதில் கடை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. விபத்தில் சிக்கியவா்களை சக பணியாளா்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்ததும் வீராணம் போலீஸாரும், வாழப்பாடி தீயணைப்புத் துறையினரும் விரைந்து சென்று படுகாயமடைந்த சிவகாசியைச் சோ்ந்த ஜெயராமன் (55), சின்னனூரைச் சோ்ந்த சுரேஷ் குமாா் (34), முத்துராஜா (47) ஆகிய மூன்று பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஆலை முழுவதையும் தண்ணீா் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்த விபத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஜெயராமன் உயிரிழந்தாா்.
மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில், ஜெயராமன் பட்டாசு மருந்து மூட்டையை வாகனத்தில் இருந்து கீழே இறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட உராய்வில் மருந்து மூட்டை வெடித்து சிதறி விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.
முதல்வா் நிவாரணம் அறிவிப்பு: இந்த விபத்தில் உயிரிழந்த, படுகாயமடைந்த குடும்பத்தினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளாா்.
விபத்தில் உயிரிழந்த ஜெயராமன் குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளாா். காயமடைந்த இருவருக்கும் தலா ரூ. 1 லட்சம் வழங்கவும் முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

