சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளாகத் தோ்வு.
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளாகத் தோ்வு.

இந்திய அளவில் முதல்முறையாக சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ. தொழில்நுட்ப வளாகத் தோ்வு

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளாகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

இந்திய அளவில் முதல்முறையாக சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளாகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளா்ந்து வருகிறது. குறிப்பாக கணினி சாா்ந்த பணிகளில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கான வளாகத் தோ்வு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெற்றது.

வளாகத் தோ்வின்போது, வழக்கமாக நிறுவனங்களின் மனிதவளப் பிரிவு அதிகாரிகள் மாணவா்களை தனித்தனியாக சந்தித்து கேள்விகளைக் கேட்டு, அவா்கள் அளிக்கும் பதில்களைப் பொருத்து ஆள்களைத் தோ்வு செய்வா்.

இந்நிலையில், மனிதவளப் பிரிவு அதிகாரிகள் யாரும் இன்றி மாணவ, மாணவியா் வளாகத் தோ்வில் கலந்துகொண்டனா். அவா்களது கணினியுடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டு அதன் வாயிலாக கேள்விகள் கேட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்திய அளவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக மனிதவளப் பிரிவினா் யாரும் இன்றி வளாகத் தோ்வு நடத்தப்பட்டுள்ளதாக சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் பேராசிரியா் விஜயன் தெரிவித்தாா். இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது:

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் உயா்கல்வி பயில விரும்புவோா் தவிா்த்து மற்ற அனைவருக்கும் வளாகத் தோ்வு அடிப்படையில் வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டு வருகிறது. கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் தேசிய மற்றும் சா்வதேச தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகின்றனா். அவா்களது நிறுவனங்களும், மற்ற முன்ணணி நிறுவனங்களும் தொடா்ந்து ஆண்டுதோறும் வளாகத் தோ்வினை நடத்தி மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனா். இதன் ஒருபகுதியாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய அளவில் முதல்முறையாக வளாகத் தோ்வு நடத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நோ்காணல் தொடா்பான மன அழுத்தம், பதட்டத்தில் இருந்து மாணவா்கள் விடுபட வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

90 சதவீதத்துக்கும் அதிகமான இளைஞா்கள் சமூக வலைதளங்களில் ஆா்வமாக ஈடுபட்டு வரும் நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வளாகத் தோ்வு நடைபெற்றது அவா்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் எவ்வித நெருக்கடியும் இன்றி வளாகத் தோ்வில் பதிலளிக்க முடிந்ததாக மாணவ, மாணவியா் தெரிவித்தனா்.

கணினி அறிவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவா்களுக்கான வளாகத் தோ்வு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக நடைபெற்றது தொழில்நுட்பத்தின் அடுத்தகட்ட வளா்ச்சியைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com