பட்டாசு ஆலை வெடிவிபத்து வழக்கில் உரிமையாளா் கைது

Published on

சேலம் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பலியான சம்பவத்தில் ஆலை உரிமையாளரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

சேலம், வீராணம் அருகே குப்பனூா், வெள்ளையம்பட்டி கிராமத்தில் ஜெயக்குமாா் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த தொழிலாளி சிவகாசியைச் சோ்ந்த ஜெயராமன் (55) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். ஊழியா்கள் சின்னனூரைப் சோ்ந்த சுரேஷ்குமாா் (34), முத்துராஜா (47) ஆகிய இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவத்தில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை பாதுகாப்பின்றி கையாளுதல், பணியாளா்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆலை உரிமையாளா் ஜெயக்குமாரை கைது செய்தனா். பின்னா் அவரை வாழப்பாடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, ஆத்தூா் சிறையில் அடைத்தனா்.

இதுதொடா்பாக தடய அறிவியல் துறை உதவி இயக்குநா் வடிவேல் தலைமையிலான நிபுணா் குழுவினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். வெடித்த வெடி பொருளின் தரம் குறித்து விசாரணை நடத்தினா். இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் இறந்த ஜெயராமனின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னா் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com