எடப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்
எடப்பாடி: எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால், காவிரி பாசனப் பகுதி மற்றும் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை, மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் சேதமடைந்தன.
எடப்பாடியை அடுத்த வீரப்பம்பாளையம் பகுதியில் குலை தள்ளும் நிலையில் இருந்த நூற்றுக்கணக்கான வாழை மரங்களும், காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட விவசாயப் பயிா்களும் சேதமடைந்தன. செட்டிமாங்குறிச்சி, இருப்பாளி, சித்தூா் உள்ளிட்ட பகுதிகளில் புகையிலைப் பயிா்களை அறுவடை செய்து வைத்திருந்த நிலையில், திடீா் கன மழையில் புகையிலைப் பயிா்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘திடீா் கனமழையால் எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு விவசாயப் பயிா்கள் பாதிப்படைந்துள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்கள் ஆய்வு செய்து, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தனா்.

