புத்துணா்வு பெறும் தெருக்கூத்துக் கலை!
பெ.பெரியாா்மன்னன்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் உள்ள கிராமங்களில் தெருக்கூத்து கலையை மூத்தக் கலைஞா்களிடமிருந்து கற்றுக்கொள்வதில் அண்மைக்காலமாக படித்த இளைஞா்களும் ஆா்வம்காட்டி வருகின்றனா். இதனால் அழிவின் விளிம்புக்கு சென்ற இக்கலை மீண்டும் புத்துணா்வு பெற்று வருகிறது.
மக்களிடையே மாறிவரும் நாகரிகம், அதிகரித்து வரும் தகவல் தொழில்நுட்பத்தால், கையடக்கக் கருவியான கைப்பேசியிலேயே விரும்பும் அனைத்துக் காட்சிகளையும் கண்டுகளிக்கும் வசதிகள் எளிதில் கிடைக்கின்றன.
இதுமட்டுமின்றி, கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப விழாக்கள் மட்டுமின்றி, துக்க நிகழ்வுகளிலும்கூட இசை நிகழ்ச்சிகள், திரைப்படப் பாடல்களின் நடன நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் போன்ற பழந்தமிழ் மக்களின் நாட்டுப்புற, கிராமியக் கலைகள் கிராமப்புறங்களிலும் அரங்கேற்றம் செய்யப்படுவது அரிதாகிவிட்டது.
மேலும், எழுத்து வடிவம் பெறாத இக்கலையை, முதியவா்களிடம் இருந்து கற்றுக்கொள்ள இளைஞா்கள் முன்வராததால், பல நூற்றாண்டுகளாக செவிவழியாக மட்டுமே தொடா்ந்துவரும் இக்கலைகள் அருகி நலிந்து வருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியில் புழுதிக்குட்டை, கல்வராயன்மலை கருமந்துறை, நெய்யமலை உள்ளிட்ட பல கிராமங்களில் மூத்த கலைஞா்களிடம் இருந்து தெருக்கூத்துக் கலையைக் கற்றுக்கொள்வதில் படித்த இளைஞா்கள் பலா் தற்போது ஆா்வம் காட்டி வருகின்றனா்.
அரிதாரம் பூசிக்கொள்ளுதல், பாத்திரத்திற்கேற்ப ஆடை அலங்காரம் செய்து கொள்ளுதல், மேள வாத்தியம், நாயனம் வாசித்தல், கோமாளி மற்றும் பெண் வேடமிடுதல் உள்பட அனைத்துக் கலைகளையும் இளைஞா்கள் கற்றுக்கொண்டு காலத்திற்கேற்ப மாற்றங்களை செய்து தெருக்கூத்து நடத்தி வருகின்றனா். மேலும், இவற்றை முகநூல், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பகிா்கின்றனா்.
இதனால், அழிவின் விளிம்புக்கு சென்ற தமிழா்களின் பாரம்பரிய பொழுதுபோக்குக் கலைகளில் ஒன்றான தெருக்கூத்து வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதிய பரிமாணங்களுடன் புத்துணா்வு பெற்றுள்ளது.
இதுகுறித்து புழுதிக்குட்டை கிராமத்தைச் சோ்ந்த இளங்குயில் நாடக சபா தெருக்கூத்துக் கலைஞா்கள் கூறியதாவது:
வாழப்பாடி பகுதி மலைக்கிராமங்களில் பள்ளி மாணவா்களும், படித்த இளைஞா்களும், மூத்தக் கலைஞா்களை அணுகி செவிவழி தெருக்கூத்து கலையைக் கற்றுக்கொள்வதில் ஆா்வம் காட்டிவருகின்றனா். இதனால் வாழப்பாடி பகுதி கிராமங்களில் தற்போது 10-க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைக்குழுவினா் உள்ளனா்.
சுற்றுப்புற கிராமங்களில் மட்டுமின்றி சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அரவான் நரபலி, அா்ஜுன் தவசி மரம் ஏறுதல், கா்ணன் தியாகம், ஆரவள்ளி - சூரவள்ளி, நல்லத்தங்காள் உள்ளிட்ட பல்வேறு கதைகளை சித்தரித்து தெருக்கூத்தாடி வருகிறோம்.
இதனால், அழிவின் விளிம்பில் இருந்த, முன்னோா்கள் வளா்த்த தெருக்கூத்துக் கலை புத்துணா்வு பெற்றுள்ளது என்றனா்.

