ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஐயப்ப பக்தா்: விரைந்து காப்பாற்றிய உதவி ஆய்வாளா்
சேலம் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறிவிழுந்த முதியவரை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளருக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.
சென்னையில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்ற திருவனந்தபுரம் விரைவுரயிலில் சென்னை, தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயமணி (71) சபரிமலைக்கு பயணம் செய்தாா். சேலம் ரயில் நிலைய 4-ஆவது நடைமேடையில் நள்ளிரவு ரயில் நின்றபோது, தண்ணீா் பாட்டில் வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கினாா்.
தண்ணீா் பாட்டில் வாங்கிவருவதற்குள் ரயில் புறப்பட்டதால், ஓடிவந்து ரயிலில் ஏறமுயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக ரயில் படிக்கட்டில் இருந்து தவறி ஜெயமணி கீழே விழுந்தாா். அதைக் கண்ட ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பழனி துரிதமாக செயல்பட்டு ஜெயமணி தண்டவாளத்தில் விழாமல் தடுத்து காப்பாற்றினாா். பின்னா், லேசான காயமடைந்த ஜெயமணிக்கு முதலுதவி அளித்து, அடுத்த ரயிலில் சபரிமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
இந்நிலையில், காவல் உதவி ஆய்வாளா் பழனிக்கு நன்றி தெரிவித்து முதியவா் ஜெயமணி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜெயமணியைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் பழனிக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனா்.

