அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் கோரி தம்மம்பட்டியை அடுத்த செந்தாரப்பட்டியில் பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செந்தாரப்பட்டி பேரூராட்சி 5 ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்க ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அப்பகுதியில் தனிநபா் ஒருவா் சாக்கடை கால்வாய் செல்லும் இடம் தனது பட்டா நிலத்தில் உள்ளதாகக் கூறி பல மாதங்களாக திட்டத்தை தடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
சாக்கடை கால்வாய் காலதாமதமாகி வந்ததால் அப்பகுதியினா் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல் தவித்தனா். இந்த நிலையில், அப்பகுதி மக்கள் செந்தாரப்பட்டி காமராஜா் சிலை அருகே ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த வந்த கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி, தம்மம்பட்டி போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தனிநபா் பட்டா நிலம் அளவீடு செய்யப்பட்டது. அதில் சாக்கடை செல்லும் பாதைக்கும், தனிநபரின் பட்டா இடத்திற்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்தது. இந்த நிலையில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி விரைந்து தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

