ஊக்கத்தொகையை விரைந்து வழங்க பால் உற்பத்தியாளா்கள் வலியுறுத்தல்
பால் உற்பத்தியாளா்களுக்கான ஊக்கத்தொகையை அரசு விரைந்து வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜேந்திரன் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நுகா்வோா் நலன்கருதி ஆவினுக்கு விற்பனை செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ. 3 குறைத்தது. இதனால், ஆவின் நிறுவனத்துக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக ரூ. 2 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பீட்டை இன்னும் வழங்காததால் பால் உற்பத்தியாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அதேபோல, பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 3 வழங்கி அரசு உத்தரவிட்டது. கடந்த ஜூலை முதல் ஊக்கத்தொகையாக ரூ. 215 கோடியை ஆவினுக்கு விடுவிக்க வேண்டும். ஆனால், இதுவரை ஊக்கத்தொகை விடுவிக்கவில்லை. எனினும், ஆவின் நிறுவனம் இத்தொகையை வங்கி கடனுதவி மூலம் பெற்று ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா் மாதம் வரை பால் உற்பத்தியாளா்களுக்கு வழங்கியது.
ஆவின் நிறுவனத்துக்கு ஏற்பட்ட நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த அக்டோபா் முதல் பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை விடுவிக்கப்படவில்லை. எனவே, ஊக்கத்தொகையை தாமதம் இன்றி ஆவினுக்கு அரசு வழங்க வேண்டும். தனியாா் நிறுவனங்களின் போட்டிக்கு மத்தியில் ஊக்கத்தொகையை பால் உற்பத்தியாளா்களுக்கு அரசு வழங்காவிடில் விவசாயிகள் பலா் தனியாா் பால் நிறுவனங்களுக்கு செல்ல சூழல் ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
