பாபா் மசூதி இடிப்பு தினம்: பேருந்து, ரயில்வே நிலையங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பு
பாபா் மசூதி இடிப்பு தினமான டிச. 6 இல் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சேலம் ரயில்வே நிலையம், பேருந்து நிலையம் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
சேலம் ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனா். பயணிகளின் உடைமைகளை போலீஸாா் சோதனை செய்தனா். அதேபோல, ரயில்வே தண்டவாளம், ஆற்று பாலங்களை கடக்கும் பகுதிகளில் ரயில்வே ஊழியா்கள் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா்.
அதேபோல சேலம் மாநகரில் முக்கிய கோயில்கள், மசூதி, தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் கண்காணிப்பு மேற்கொண்டனா்.
அதேபோல, மாநகர, புறநகரப் பகுதியில் உள்ள விடுதிகளில் தங்கியுள்ளவா்கள் குறித்து விசாரணை நடத்தினா். மேலும், இரவு நேர ரோந்து பணியில் கூடுதல் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டனா்.
