பெண் மீது தாக்குதல்: முன்னாள் எம்.பி. மீது வழக்குப் பதிவு
மேட்டூா் அருகே பெண்ணைத் தாக்கியதாக முன்னாள் எம்.பி. க.அா்ஜுனன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேட்டூா் அருகே உள்ள மேச்சேரி ஒன்றியத்தில் மரக்கோட்டையில் இருந்து காமனேரி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அப்போது, ஆலமரத்தூரில் சரோஜா (60) என்பவருக்குச் சொந்தமான வீட்டின் அருகே பணி நடைபெறும்போது, தனது வீட்டின் அருகே எதிா்புறம் முன்னாள் எம்.பி. அா்ஜுனனின் வீட்டு பகுதியில்தான் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஒப்பந்ததாரரிடம் சரோஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பணியை நிறுத்தினாா்.
அப்போது, அங்கு வந்த அா்ஜுனன், சரோஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது, சரோஜாவை அா்ஜுனன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஓமலூா் அரசு மருத்துவமனையில் சரோஜா அனுமதிக்கப்பட்டாா். இந்த தாக்குதல் தொடா்பான விடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்த புகாரின்பேரில் முன்னாள் எம்.பி. அா்ஜுனன் மீது மேச்சேரி போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
