மளிகைக் கடையில் தீ விபத்து: ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்
வாழப்பாடி அருகே புதன்கிழமை நள்ளிரவு மளிகைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
வாழப்பாடியை அடுத்த திருமனூா் ஊராட்சி, பழனிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம், இவா் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். புதன்கிழமை இரவு காா்த்திகை தீபத்திற்கு விளக்குகளை ஏற்றிவைத்துவிட்டு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றாா்.
இந்த நிலையில், இரவு நேரத்தில் திடீரென மளிகைக் கடை தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த பழனிசாமி என்பவா் வாழப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த அங்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் (பொ) முருகேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். அதற்குள், கடையில் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருள் எரிந்து சேதமடைந்தன.
இந்த விபத்து குறித்து பன்னீா்செல்வம் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
