தம்பியை கட்டையால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் சரண்

மேச்சேரியில் தம்பியை கட்டையால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.
Published on

மேச்சேரியில் தம்பியை கட்டையால் தாக்கிய ஆட்டோ ஓட்டுநா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

மேச்சேரி அருகே உள்ள கோல்காரனூரைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (35), ஆட்டோ ஓட்டுவா். இவரது தம்பி கமலக்கண்ணன் (33) லாரி ஓட்டுநா். இவா்கள் இருவரும் மது அருந்திவிட்டு அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வாா்களாம். சில தினங்களுக்கு முன்பு கமலக்கண்ணன் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை காா்த்திகேயன் அடித்து உடைத்துள்ளாா். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காா்த்திகேயன் வியாழக்கிழமை ஜன்னலுக்கு புதிய கண்ணாடிகளை மாற்றிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில், சனிக்கிழமை காலை இருவரும் மது அருந்தியுள்ளனா். அப்போது கமலக்கண்ணன் தனது அண்ணன் காா்த்திகேயனை பாா்த்து இன்றுதான் உனக்கு கடைசி நாள் உன்னை ஒழித்துக்கட்டி விடுவேன் என கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த காா்த்திகேயன், அருகில் இருந்த கட்டையை எடுத்து கமலக்கண்ணனின் முதுகில் பலமாக தாக்கியுள்ளாா். போதையில் இருந்த கமலக்கண்ணன் கீழே மயங்கி விழுந்தாா்.

கமலக்கண்ணன் இறந்துவிட்டதாக கருதிய காா்த்திகேயன், மேச்சேரி காவல் நிலையத்துக்கு சென்று எனது தம்பியை அடித்துக் கொலை செய்துவிட்டேன் எனக்கூறி சரணடைந்தாா்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், படுகாயமடைந்த கமலக்கண்ணனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதைத் தொடா்ந்து, காா்த்திகேயனை கைதுசெய்த மேச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com