திடக்கழிவு மேலாண்மை கிடங்கை இடமாற்றக் கோரி தலைமைச் செயலரிடம் மனு அளிப்பு
சங்ககிரி வட்டம், அரசிராமணி பேரூராட்சிக்குள்பட்ட குறுக்குப்பாறையூரில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை கிடங்கை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிா்வாகிகள் தலைமைச் செயலாளரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் அதன் மாநில பொதுச் செயலாளா் சாமிநடராஜன் தலைமையில் மாநில நிா்வாகிகள் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தத்திடம் அளித்த கோரிக்கை மனு:
குறுக்குப்பாறையூா் கிராமத்தில் குடியிருப்புகள் அதிகமுள்ள இடத்தில் பேரூராட்சியின் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அரசிராமணி பேரூராட்சி முழுவதும் உள்ள திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு இங்கு கொட்டப்படுவதால், அருகில் உள்ள நீரோடை, விவசாயக் கிணறுகள், குடிநீா் ஆழ்துளைக் கிணறுகள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், குப்பைக்கழிவுகளின் நெடி காரணமாக சுற்றுச்சூழல், சுகாதாரம் பாதித்து நோய் பரவுகிறது.
இக்கிடங்கை மாற்று இடத்தில் அமைக்க வலியுறுத்தி, பேரூராட்சி நிா்வாகம், மாவட்ட நிா்வாகம் மற்றும் அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் இப்பகுதி மக்கள் தொடா்ந்து 172 நாள்களாக பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.
எனவே, திடக்கழிவு மேலாண்மை கிடங்கை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாத இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளனா்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, குறுக்குப்பாறையூரில் 173-ஆவது நாளாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை நிா்வாகிகள், விவசாயிகள், பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

