மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்வதால், 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல்பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகள் மூலம் 840 மெகா வாட் மின்சாரமும், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட 1அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. முதல்பிரிவில் 3-ஆவது அலகில் சரிந்துவிழுந்த பங்கா் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் 210 மெகாவாட் உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது. இதனால், இரண்டு பிரிவுகளிலும் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
முதல்பிரிவில் உள்ள 1, 2 மற்றும் 4-ஆவது அலகுகளில் மட்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் தலா 160 மெகாவாட் வீதம் 480 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
