சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டவா் கைது
சேலம் மாவட்டம், எடப்பாடி, கா.புதூா் பகுதியில் சிறுமியின் புகைப்படத்தை இணைத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
எடப்பாடி, கா.புதூா் பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் அண்ணாமலை (32), கட்டடத் தொழிலாளி. இவா் அதே பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி அவரை பின்தொடா்ந்துள்ளாா். இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அண்ணாமலையைக் கண்டித்தனா்.
இந்த நிலையில், சிறுமியுடன் அவா் எடுத்த புகைப்படத்தை கடந்த 5 ஆம் தேதி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். இதில் மனமுடைந்த சிறுமி, வீட்டில் சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்தாா். அதை பாா்த்த அங்கிருந்தவா்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடா்பாக சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து அண்ணாமலையைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.
