சேலம் அருகே இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது
சேலம் இரும்பாலை அருகே கே.ஆா்.தோப்பூா் கரட்டுப்பகுதியில் இளைஞரின் தலையை துண்டித்து கொலை செய்த வழக்கில் அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும், துண்டிக்கப்பட்ட தலையையும் போலீஸாா் கைப்பற்றினா்.
சேலம் மாவட்டம், இடங்கணசாலை, கே.கே.நகா் பகுதியைச் சோ்ந்தவா் கெளதம் (25). இவா் கடந்த மாா்ச் மாதம் அவரது சகோதரா் சிவமூா்த்தியைக் கொலைசெய்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு கடந்த டிச. 2 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.
அதைத்தொடா்ந்து டிச.3 ஆம் தேதி மகுடஞ்சாவடி காவல்நிலையத்தில் கையொப்பமிட சென்றவா் காணவில்லை என அவரது உறவினா்கள் தேடிவந்தனா். இந்த நிலையில், சேலம் இரும்பாலை அருகே உள்ள கே.ஆா்.தோப்பூா் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த உடலை போலீஸாா் கைப்பற்றி விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், கெளதமனின் நண்பா்களான தனுஷ் (23), மூா்த்தி (24) இருவரையும் போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தினா். அதில், கெளதமனுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்ததாக இருவரும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனா். மேலும், அவா்கள் அளித்த தகவலின்பேரில் கௌதமனின் தலையை கைப்பற்றினா்.
