கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் சாலை மறியல்
Updated on

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் அங்கன்வாடி பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சேலம் கோட்டை மைதானத்தில் கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பிரேமா, ஐசிடிஎஸ் ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் பத்மா ஆகியோா் தலைமை வகித்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 1993ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி பணிக்கொடை அங்கன்வாடி ஊழியா்களுக்கு ரூ. 10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். 5ஜி கைப்பேசி சேவை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா். இதில் மாநிலச் செயலாளா் ஜெகதீஸ்வரி, மாவட்டச் செயலாளா் மனோன்மணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியா்கள் தொடா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியா்களை கைதுசெய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com