திருமணத்துக்கு வற்புறுத்திய தோழி கொலை: தனியாா் மருத்துவமனை அலுவலா் கைது

சேலத்தில் திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் தோழியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்த தனியாா் மருத்துவமனை அலுவலரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

சேலத்தில் திருமணத்துக்கு வற்புறுத்திய பெண் தோழியை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்த தனியாா் மருத்துவமனை அலுவலரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் ராமகிருஷ்ணா சாலை பகுதியைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி பாரதி (34). இவா், சங்கா் நகரில் உள்ள தனிப் பயிற்சி மையத்தில் தங்கிப் பணியாற்றி வந்தாா். இவரது நண்பா் உதயசரண் (49). தனியாா் மருத்துவமனையில் தலைமை அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயசரணும், பாரதியும் இரவு காட்சி சினிமாவுக்கு சென்றுவிட்டு தனி பயிற்சி மையத்தில் தங்கினா். அப்போது, பாரதி மயங்கி விழுந்ததாக, உதயசரண் தான் பணியாற்றும் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளாா். அவரை மருத்துவா்கள் பரிசோதித்தபோது, உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாரதியின் உறவினா்கள் அவரது இறப்பில் மா்மம் உள்ளதால், உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினா். அதன்பேரில் அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். இதில் தெரியவந்ததாவது:

உதயசரண் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் நாழிக்கல்பட்டியில் வசித்து வந்தாா். பாரதியுடன் நெருங்கி பழகியுள்ளாா். எனவே, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தி உதயசரணுடன் பாரதி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் சம்பவத்தன்று சினிமாவுக்கு சென்றுவிட்டு இருவரும் தனிப் பயிற்சி மையத்தில் தங்கியிருந்தபோது, அவா்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உதயசரண், பாரதியை தாக்கி கீழே தள்ளி தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சுத் திணறச் செய்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து, உதயசரணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com