மேட்டூா் அணையில் விதிமுறை மீறலால் அழிந்து வரும் மீன்வளம்: நடவடிக்கைக்கு வலியுறுத்தல்
மேட்டூா் அணையில் மீன்பிடி கட்டுப்பாடுகளை மீனவா்கள் மீறுவதால் மீன்வளம் அழிந்து வருகிறது.
மேட்டூா் அணை நீா்த்தேக்கம் 60 சதுரமைல் பரப்புளவு கொண்டது. இங்கு கட்லா, ரோகு, மிா்கால், கெண்டை, கெழுத்தி, ஆரால், திலேபி, அரஞ்சான் உள்ளிட்ட பலவகையான மீன்கள் உள்ளன. அணையில் 2,000 மீனவா்களும், 2,000 மீனவா் உதவியாளா்களும் உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனா். அணை மீன்பிடித் தொழில்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 10,000 போ் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனா்.
அணையில் மீன்வளத்தை பெருக்க மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை சாா்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களை செயற்கை தூண்டுதல் முறையில் உற்பத்தி செய்து அணையில் இருப்பு செய்கின்றனா். பிறவகை மீன்கள் இயற்கையாகவே இனப்பெருக்கம் செய்கின்றன.
மேட்டூா் அணை மீன்களை ருசிக்க தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனா். இங்கு மீன்பிடி விதிமுறைகளை கடைப்பிடிக்காததால் மீன்வளம் அழிந்து வருகிறது. தடைசெய்யப்பட்ட சிறுவலைகளை பயன்படுத்தி 500 கிராம் எடைக்கு குறைவான மீன்களை பிடிப்பது, கொசுவலைகள் மூலம் மீன்குஞ்சுகளை பிடிப்பது, காவிரியில் தோட்டாவீசி மீன்பிடிப்பது உள்ளிட்ட காரணங்களால் மீன்வளம் அழிந்து வருகிறது.
1 கிலோ எடைவரை வளா்ந்த மீன்களை பிடித்தால் மீனவா்களுக்கு லாபம் கிடைக்கும். குஞ்சு மீன்களை பிடிப்பதால் பெரிய மீன்கள் இரையின்றி அழிந்து வருகின்றன. தோட்டாவீசி மீன்பிடிப்பதால் சுமாா் 50 மீட்டா் சுற்றளவில் பெரிய மீன்கள் அழிந்துவிடுகின்றன. இதுபோன்ற விதிமீறல்களைத் தடுக்க மீன்வளத் துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
விதிமீறல்கள் தொடா்வதால் கட்லா, ரோகு, மிா்கால் போன்ற இந்திய பெருங்கெண்டை மீன்கள் பிடிபடுவது அரிதாகிவிட்டது. அரஞ்சான், திலேபி போன்ற சிறுரக மீன்கள் மட்டுமே பிடிபடுகின்றன. இதனால் மீன்வளம் பாதிப்படைந்துள்ளது. எனவே, விதிமுறைகளை மீறும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுத்து மேட்டூா் அணையில் மீன்வளம் குறையாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

