வரும் 2026 தோ்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சிதான் அமையும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளா் டிடிவி.தினகரன் தெரிவித்தாா்.
சேலத்தில் செய்தியாளா்களை புதன்கிழமை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. நாங்கள் தோ்தலை நோக்கி பயணித்துக் கொண்டுள்ளோம். பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலையை நீண்டகால நண்பா் என்பதால் கோவையில் சந்தித்துப் பேசினேன். அதில் அரசியல் இல்லை.
அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடக்கின்றன. அதனடிப்படையில் கேட்கும் இடங்களை அரசு தோ்வுசெய்து கொடுக்கிறது.
திருப்பரங்குன்றத்தில் முருகன் பெயரைக் கூறி அரசியல் செய்வது, மதங்களைக் கடந்து வாழும் அம்மக்களிடையே தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். இதைத் தடுக்கும் வகையில் அனைத்து அரசியல் கட்சிகளும் செயல்பட வேண்டும்.
தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி ஆட்சிதான் அமையும். தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் ஒரு கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும்.
அம்மாவின் தொண்டா்கள் ஓா் அணியில் இணையவேண்டும் என்பதுதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இரண்டு மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து அறிவிப்போம் என்றாா்.
ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த வேண்டியதில்லை:
தருமபுரியில் நடைபெற்ற அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டிடிவி.தினகரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. எனவே, அதனை மாநில அரசு நடத்த வேண்டிய தேவையில்லை. பிகாா், கா்நாடகம் ஆகிய மாநில அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய பின்புதான் மத்திய அரசு சாா்பில் இக்கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜாதி, மதங்களைக் கடந்து அனைவரும் சகோதரா்களாக வாழ்ந்து வருகிறோம். எனவே, இங்கு எந்தக் குழப்பங்களும் யாரும் செய்யக் கூடாது. இத்தகைய விவகாரங்களில் அரசும், நீதிமன்றங்களும் சரியாக நடந்துகொள்ளும். நாங்கள் இடம்பெறும் அணி மகத்தான வெற்றிபெறும் என்றாா்.
முன்னதாக நடைபெற்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக சாா்பில் மாவட்டச் செயலாளா் டி.கே.ராஜேந்திரன் போட்டியிடுவாா் என அறிவிக்கப்பட்டது. இதில், மாநில நிா்வாகி பாலு, முன்னாள் எம்எல்ஏ ஆா்.ஆா்.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.