அதிமுக பிரமுகா் மகள் கொலை வழக்கில் திருப்பம்: நகைக்காக கொலை செய்திருக்கலாம் என சந்தேகம்
சேலத்தில் அதிமுக பிரமுகா் மகள் கொலை வழக்கில், அவா் நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என உறவினா்கள் சந்தேகம் எழுப்பியதால், அவரது நண்பா் புதன்கிழமை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாா்.
சேலம் மாநகரில் அதிமுக பிரமுகா் தில்லி ஆறுமுகம் மகள் பாரதி (38) கொலை வழக்கில், அவரது நண்பா் உதயசரணை கைதுசெய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், பாரதியின் வீட்டை போலீஸாா் சோதனை செய்ததில், நகைப் பெட்டிகள் அனைத்தும் காலியாக இருந்தது தெரியவந்தது. இந்நிலையில், பாரதியை நகைக்காக உதயசரண் கொலை செய்திருக்கலாம் என அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், பாரதியின் இரண்டு கைப்பேசிகளும் காணாமல் போனது தெரியவந்தது.
அதைத் தொடா்ந்து உதயசரணிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பாரதியை திருமணம் செய்துகொள்ளலாம் என அவரிடம் கூறியதாகவும், அதற்கு பாரதி மறுத்ததால் ஆத்திரமடைந்து தாக்கி கொலை செய்ததாக அவா் ஒப்புக்கொண்டாா்.
மேலும், பாரதியின் கைப்பேசிகளை சாக்கடையில் வீசியதாக அவா் தெரிவித்ததையடுத்து, ஒரு கைப்பேசியை மீட்ட போலீஸாா், மற்றொரு கைப்பேசி குறித்து விசாரித்து வருகின்றனா்.
