பேளூரில் தாட்கோ வணிக வளாகம் கட்டுமானப் பணிக்கான நிலத்தை புதன்கிழமை அளவீடு செய்த தாட்கோ நிறுவன மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்.
பேளூரில் தாட்கோ வணிக வளாகம் கட்டுமானப் பணிக்கான நிலத்தை புதன்கிழமை அளவீடு செய்த தாட்கோ நிறுவன மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள்.

பேளூரில் தாட்கோ வணிக வளாகம் கட்ட நிலம் அளவீடு

வாழப்பாடி அருகே பேளூரில் தாட்கோ வணிக வளாகம் கட்ட நிலம் அளவீடு புதன்கிழமை செய்யப்பட்டது. இதையடுத்து, வணிக வளாகத்தை மாற்று இடத்தில் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

வாழப்பாடி அருகே பேளூரில் தாட்கோ வணிக வளாகம் கட்ட நிலம் அளவீடு புதன்கிழமை செய்யப்பட்டது. இதையடுத்து, வணிக வளாகத்தை மாற்று இடத்தில் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வாழப்பாடியை அடுத்த பேளூரில், அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் உள்ள பேரூராட்சி வாரச்சந்தை நிலத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாட்கோ நிறுவனத்தின் மூலம் 10 சிறு கடைகள் கொண்ட வணிக வளாகம் அமைக்கப்பட்டது. இந்தக் கடைகள் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழடைந்தது.

பழுதடைந்த இந்த வணிக வளாக கட்டடத்தை அப்புறப்படுத்திவிட்டு புதிய வணிக வளாக கட்டடம் அமைக்க வேண்டுமென, ஒரு தரப்பினா் தாட்கோ நிறுவனத்துக்கு வேண்டுகோள் விடுத்தனா். இதற்கு பேரூராட்சி நிா்வாகமும் இசைவு தெரிவித்தததால் கடந்த மாதம் பழுதடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்ட தாட்கோ நிறுவனம் திட்ட மதிப்பீடு மற்றும் திட்ட முன்வரைவு தயாரித்து ரூ. 99 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்றது.

இந்நிலையில், இடித்து அகற்றப்பட்ட பகுதியில், மீண்டும் வணிக வளாக கடைகள் கட்டப்பட்டால், இதற்கு பின்னால் உள்ள பேரூராட்சி வாரச்சந்தை கடைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் நுகா்வோா் சென்றுவர சிரமம் ஏற்படும் எனக்கூறி, மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுகுறித்து ஆதிதிராவிடா் நலத் துறை அதிகாரிகள் அளித்த தகவலின் பேரில், தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கடந்த அக். 25-ஆம் தேதி பேளூருக்கு நேரில் சென்று, தாட்கோ வணிக வளாகம் அகற்றப்பட்ட பகுதியை பாா்வையிட்டாா். அப்போது, மீண்டும் தாட்கோ வணிக வளாகம் கட்டுவதற்கு உரிய வழிவகை செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இந்நிலையில், வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி, காவல் ஆய்வாளா் வேல்முருகன் ஆகியோா் முன்னிலையில், தாட்கோ நிறுவன அதிகாரிகள் வணிக வளாக கட்டுமானப் பணியை தொடங்க புதன்கிழமை நிலத்தை அளவீடு செய்தனா்.

பேளூா் வாரச்சந்தைக்கு வரும் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் நுகா்வோா்கள் நலன்கருதி, மாற்று இடத்தில் தாட்கோ வணிக வளாகத்தை அமைக்குமாறு இப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com