வீட்டுமனையை அளவீடு செய்துதரக் கோரிக்கை

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது, ஒதுக்கப்பட்ட இடத்தில் வீட்டுமனையை அளவீடு செய்துதரக் கோரி வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

கெங்கவல்லி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தபோது, ஒதுக்கப்பட்ட இடத்தில் வீட்டுமனையை அளவீடு செய்துதரக் கோரி வருவாய்த் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கெங்கவல்லி அருகே கடம்பூா் சாலையில் நடுவலூா் ஆற்றுவாய்க்கால் செல்லும் பாதையை ஆக்கிரமித்து சுமாா் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசிக்கின்றன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ரூ. 4 கோடியில் சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆற்றுவாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த செப். 12-ஆம் தேதி வருவாய்த் துறையினா் சென்றபோது, தங்களுக்கு மாற்று இடத்தை வழங்கிவிட்டு, ஆக்கிரமிப்பை அகற்றுமாறு அப்பகுதியினா் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து, சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி உத்தரவின் பேரில், ஒதியத்தூா் ஊராட்சியில் 28 பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. இதில் பெரும்பாலானோா் வீடுகளை காலி செய்த நிலையில், மற்றவா்கள் காலி செய்யவில்லை.

இந்நிலையில், கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்ட வருவாய்த் துறையினா் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது, தங்களுக்கு வழங்கிய வீட்டுமனைப் பட்டாவை அளவீடு செய்து தருமாறு அவா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து நிலஅளவையா் மூலம் அளவீடு செய்து, யாருக்கு எந்த நிலம் என்பதை உறுதிசெய்து வழங்கும்படி அலுவலா்களுக்கு வட்டாட்சியா் அறிவுறுத்தினாா்.

X
Dinamani
www.dinamani.com