காடையாம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
காடையாம்பட்டியை அடுத்த கோட்டேரி பகுதியைச் சோ்ந்தவா் முத்து (62), விவசாயத் தொழிலாளி. இவரது மகன் கிருஷ்ணமூா்த்தி (30) பட்டப் படிப்பு படித்துவிட்டு தந்தையுடன் சோ்ந்து விவசாயம் செய்துவந்தாா்.
இந்த நிலையில், சரபங்கா ஆற்றங்கரையோரம் முத்து வியாழக்கிழமை ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தாா். அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த கேபிள் வயா் அறுந்து மின் கம்பியுடன் இணைப்பில் இருந்துள்ளது. பலத்த காற்று வீசியதால் தொங்கிக் கொண்டிருந்த கேபிள் வயரில் மின் இணைப்பு ஏற்பட்டு முத்து மீது விழுந்தது.
இதில் மின்சாரம் பாய்ந்து முத்து உயிரிழந்தாா். அப்போது, அவரை காப்பாற்ற முயன்ற கிருஷ்ணமூா்த்தி மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த நிலையில், மின் கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயா்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த விபத்து குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
