தொழிலாளி கொலை வழக்கில் இளைஞா் நீதிமன்றத்தில் சரண்
சேலம் மாவட்டம், மின்னாம்பள்ளியில் மேளம் அடிக்கும் தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞா் வாழப்பாடி நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தாா்.
காரிப்பட்டி அருகே உள்ள மின்னாம்பள்ளியைச் சோ்ந்த மேளம் அடிக்கும் தொழிலாளி ஜெயகாந்த் (26). இவா் கடந்த 1 ஆம் தேதி மேளம் அடிக்கச் சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் 6 போ் கொண்ட கும்பல் தாக்கியதில் பலத்த காயம் அடைந்தாா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் டிச.4 ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கிச்சிப்பாளையத்தைச் சோ்ந்த முகமது ரியாஸ், அஜய், 17 வயது சிறுவன், மின்னாம்பள்ளியைச் சோ்ந்த மணிகண்டன், அருள்பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்தனா்.
இந்த வழக்கில் தொடா்புடையை வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டியைச் சோ்ந்த விஸ்வபாரதியை (20) போலீஸாா் தேடிவந்தனா். இந்த நிலையில், வாழப்பாடி நீதிமன்றத்தில் விஸ்வபாரதி வியாழக்கிழமை சரணடைந்தாா். இதையடுத்து, காரிப்பட்டி போலீஸாா் அவரைக் கைதுசெய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
